செய்திகள்

Wednesday 25 November 2009

புதிய மலையகம் உதயமாவதற்கு

மலையக மக்கள் மலையகத் தலைமைகளில் நம்பிக்கையிழந்தவர்களாக உள்ளனர். ""புதிய தலைமைகளாக'' உருவெடுத்தவர்கள் அரசியலில் சோரம் போன நிலையில் மலையக அரசியலில் ""மாற்றுத் தலைமை'' என தம்மைப் பிரகடனப்படுத்தியவர்கள் 

மதுபானத்திற்குள் மலையகத்தை மூழ்கடித்து வாக்கு வேட்டையாடியதை வேதனையின் விளிம்பில் நின்று மலையக மக்கள் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கின்றது. 

மொத்தத்தில் தொடரும் அரசியல் பித்தளாட்டங்களால் ஏமாற்றங்கள் தந்த வலியுடன் மலையக மக்கள் மாற்றுத் தலைமையைத் தேடி தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். 

பிரச்சினைகளுக்குள் மூழ்கிப் போய்க் கிடக்கும் மலையகத்தை ""மீட்பர்களாக'' வேஷமிட்டுப் புறப்பட்டுள்ள அரசியல் தொழிற்சங்கவாதிகளே இன்று மக்களுக்குப் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளனர். 

சந்தாவுக்கான தொழிற்சங்கப் போட்டியும் வாக்குகளுக்கான அரசியல் போட்டியும் இணைந்து ஒவ்வொரு அரசியல் தொழிற்சங்கமும் மலையகத்தை பாத்திகட்டி, வேலிபோட்டு மக்களை மந்தைகளாக நினைத்து கட்டி வைக்க முயல்கின்றன. மக்களோ தொழிற்சங்க சந்தா கொடுத்தும் பலனில்லை. அரசியல் பயணத்துக்கென வாக்குகளை அள்ளிக் கொட்டியும் பயனில்லை என்று கூறுகின்றனர். 

மொத்தத்தில் பரம்பரைத் தலைமை, புதிய தலைமை, மாற்றுத் தலைமை, மழைக்கு முளைக்கும் காளான் தலைமை என பல தலைமைகள் உருவெடுத்து அரசியல் தொழிற்சங்க ரீதியில் மலையக மக்களைப் பிரித்து தத்தமது சுகபோக இலாபங்களுக்காக அவர்களைப் பலிக்கடா ஆக்கிக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய போக்குக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று மாத்திரம் மலையக மக்கள் கூறிக் கொண்டிருப்பதில் பலனில்லை. 

மக்கள் தமக்கான சிறந்த அரசியல், தொழிற்சங்கத் தலைமையைத் தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும். ஊழல் நிறைந்த ஏமாற்றுப் பேர்வழிகளான அரசியல், தொழிற்சங்கத் தலைமைகளை தூக்கி எறிய முன்வர வேண்டும். அரசியல் தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் என்ற ரீதியில் மக்கள் ஒன்றிணைய வேண்டும். 

அரசியல் தொழிற்சங்கவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பலியாகாது மக்களுக்கிடையிலான ஒற்றுமை முன்னெடுக்கப்பட வேண்டும். தொழிற்சங்கத்துக்கான சந்தா செலுத்தப்படும்போது தமது தொழிற்சங்க உரிமைகள் காப்பாற்றப்படுகின்றதா என்பது குறித்து அவதானம் செலுத்த வேண்டும். தேர்தல் காலங்களில் வாக்களிக்கும்போது மதுபானத்துக்கும் பணத்துக்கும் வாக்குகளை விற்கும் நிலைக்கு முடிவு கட்ட வேண்டும். 

அரசியல்வாதிகளின் öவறும் வாக்குறுதியில் நம்பிக்கை வைக்காது அவர்களின் கடந்த கால சேவை, எதிர்காலத் திட்டங்கள் குறித்து கவனத்தில் எடுத்து மக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும். மக்கள் நலன் குறித்த திட்டங்களுக்கு அரசியல்வாதிகளிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும். 

மக்களின் சந்தாக்களிலேயே தொழிற்சங்கங்கள் இயங்குகின்றன. மக்களின் வாக்குகளினாலேயே நாடாளுமன்ற மாகாண சபை, பிரதேச சபைகளுக்கு அரசியல்வாதிகள் செல்கின்றனர். இவை அனைத்துக்கும் காரணகர்த்தா தாமே என்ற நிலையில் நின்று சிந்தித்து, செயற்பட்டு சமூகத்தின் தேøவயை நிறைவேற்றிக் கொள்வதற்கு மக்கள் தயங்கக் கூடாது. 

கையாலாகாத, சுயநல அரசியல், தொழிற்சங்கத் தலைவர்களை ஓரம் கட்டுவது போன்று தம்முடன் இணைந்து சமூகத்துக்கு எதிராகச் செயற்படும் புல்லுருவிகளையும் மக்கள் ஓரம் கட்டத் தயங்கக்கூடாது. அரசியல் உரிமை, கௌரவமான வாழ்வு, பாதுகாப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து சிந்தித்து செயலாற்ற மலையக மக்கள் முன்வர வேண்டும். 

மொத்தத்தில் புதிய தலைமை குறித்து சிந்திக்கும் மலையகம் முதலில் தனது சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தூர நோக்குடன் செயற்பட முன்வர வேண்டும். இதுவே புதிய மயைலகம் பிறக்க வழிவகுக்கும்
வீரகேசரி-29.03.2009

No comments:

Post a Comment